மிகப்பழமையான விலையுயர்ந்த நற்மணப்பொருட்களில் குங்குமப்பூவும் ஒன்று. இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூஞ்சோலைகளுக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள பாம்போர் என்ற பகுதியில் ஏறக்குறைய 3350 ஏக்கர் பரப்பளவில் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஜம்முவிலும் சிலபகுதிகளில் பயிராகிறது. நமதுநாட்டின் தேவைக்கு ஸ்பெயின் நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.சீனாவிலும் இந்தியாவிலும் 2000 வருடங்களுக்கும் மேலாக மருந்தாகவும் வாசனையூட்டும் உணவுக்கலப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அக்காலத்தில் சீனா முதலிய நாடுகளுக்கு பயணித்த ஒருவர் தன்கைத்தடியின் உட்பகுதியில் இதன் நாற்றை மறைத்துக் கொண்டுவந்து அதனை சாப்ரான் வால்டன் என்ற பகுதியில் பயிரிட்டார். அதனால் இதன் பெயர் சாப்ரான் என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. சுமார் 60,000 செடிகளிலிருந்து எடுக்கப்படும் சூல்முடிகள் பக்குவப்படுத்தப்பட்டு அரைக்கிலோ அளவு! குங்குமப்பூ கிடைக்கிறது. இதனைச் சேகரிக்கவும் பக்குவப்படுத்தவும் நிறைய மனித உழைப்புத் தேவைப்படுகிறது. தேவையும் அதிகமிருப்பதால் விலையும் அதிகம். எனவே நம்பிக்கையானவர்களிடம் வாங்க வேண்டும். முதல்தரப்பூ சாகி, என்றும் இரண்டாம்தரப்பூ மோக்ரா என்றும் மூன்றாம்தரப் பூ லாச்சாஎன்றும் அழைக்கப்படுகின்றன.ரோமானியர்கள் குளிக்கும் நீரில் கலந்து உடல் அழகுக்காகக்குளித்தார்கள். மதுவில் மணத்துக்காகவும் உடல்நலத்துக்காகவும் கலக்கிப் பருகினார்கள். பொதுவாக இது குழந்தைகளின் உடல்நலத்துக்காகவும், பெண்களின் கருப்பைக் கோளாறுகளுக்காகவும், ஆண்களின் வீரியத்துக்கும், நுரையீரல் சார்பான நோய்களுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. தமிழ் மருத்துவத்தில் தும்மல், சளி, தலைவலி, இருமல், மூச்சுக்கோளாறுகள், இவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகும். அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும். அழகைக்கூட்டுவதற்கான முகப்பூச்சுக்களிலும், தாது உட்டமளிக்கும் மருந்தாகவும், பலவித எண்ணைகளிலும் இதைச் சேர்க்கிறார்கள். தாது நாட்டம், நாவறட்சி, குடல்வாதம், மேகநீர்ம் கீல் பிடிப்பு, கபாதிக்கம், அதிகச்சுரம், பயித்தியம், வாதம், மண்டைவலி, கருவிழியில் வரும் பூ, வாந்தி, நீர்வடியும் காதுமந்தம், வாயினிப்பு, பிரசவத்திற்குப் பின் ஏற்படும் நலக்குறைவு இவை குங்குமப்பூவால் தீரும்.கருவுற்ற பெண்கள், பால் அல்லது தாம்பூலத்துடன், 50 முதல் 100 மில்லிகிராம் அளவு சேர்த்து உண்டுவருவதால் தாய்க்கும் குழந்தைக்கும் சீதளம் தொடர்புடைய நோய்கள் அண்டாது. குழந்தை நல்ல சிறப்பான உடல்நலத்துடன் இருக்கும். குழந்தை சிவப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையே. ஆனால் வளமான சந்ததி உருவாகும். பிரசவம் தாமதிக்கும்போது சோம்புக் கசாயம் வைத்து அதில் 2 கிராம் அளவு பூவை அரைத்துப்போட்டு குடிப்பதால் எளிதில் பிரசவமாகும். 200 மில்லிகிராம் அளவு பூவை வெற்றிலையில் மடித்து 3 வேளையும் உணவுக்குப்பின் மென்று விழுங்கினால் பிரசவித்த பெண்களின் உதிரச் சிக்கல் வெளியாகும்.ஆண்களுக்கு சளி, அலுப்பு, சோர்வுநீங்கி உற்சாகமேற்படும். வாய்மணக்கும். வசதியிருப்பவர்கள் பலவிதமான உணவுப்பண்டங்களில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றல் வளரும் உடலும் மனமும் மற்றும் முகமும் பொலிவுடன் விளங்கும்.
இயற்கைமருத்துவம். (Nature medicine)
Comments
Post a Comment